முக்தி தரும் ஏழு ஸ்தலங்களுள் ஒன்று. மோட்சத்திற்கு இது துவாரமாக உள்ளதால் 'துவாரகா' என்று அழைக்கப்படுகிறது. ஹரித்துவார், வாரணாசி, அயோத்தி, மதுரா, உஜ்ஜயினி, காஞ்சிபுரம் ஆகியவை மற்ற ஆறு நகரங்கள். ஜராசந்தன் யாதவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்காக, கிருஷ்ணன் சமுத்திரராஜனிடம் இடம் கேட்டு, விஸ்வகர்மாவைக் கொண்டு இந்நகரத்தை அமைத்ததாக ஐதீகம். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் கடற்கோள்களால் பலமுறை பாதிக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
மூலவர் கல்யாண நாராயணன், துவாரகாநாத்ஜீ என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கல்யாண நாச்சியார் என்பது திருநாமம். பகவான் திரௌபதிக்கு பிரத்யக்ஷம். இங்கு கண்ணபிரானுக்கு ஒரு மணிக்கு ஒருமுறை உடையை மாற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு படைக்கிறார்கள்.
பக்த மீரா கண்ணனை நினைந்து அவனோடு இரண்டறக் கலந்த ஸ்தலம். இங்கிருந்து ஓகா துறைமுகம் செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ருக்மிணி கோயிலில் தான் கிருஷ்ணன் ருக்மிணியை விவாஹம் செய்துகொண்டதாக ஐதீகம். பின்னர் ஓகா துறைமுகம் சென்று அங்கிருந்து விசைப்படகில் பேட் துவாரகை சென்றால் கிருஷ்ணன் மாளிகையைக் காணலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரதாரியாக ஸேவை சாதிக்கிறார். கிருஷ்ணன் வைகுண்டம் செல்வதற்கு முன் ஸேவை சாதித்த அரச மரத்தடியை 'பாலகா' என்ற இடத்தில் காணலாம்.
பெரியாழ்வார் 5 பாசுரங்களும், ஆண்டாள் 4 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 2 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் தலா 1 பாசுரமுமாக மொத்தம் 13 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|